தமிழ் சினிமாவில் இயக்குனரும் நடிகருமாக வலம் வரும் சுந்தர். சி தற்போது கேங்கர்ஸ் எனும் திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். அடுத்தது மூக்குத்தி அம்மன் 2, அரண்மனை 5 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக மதகஜராஜா எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர் சந்தானம் காமெடியனாக நடித்திருந்தார்.
நீண்ட வருடங்களாக நிலுவையில் இருந்த இந்த படம் நேற்று (ஜனவரி 12) பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வந்தது. இந்த படம் வழக்கமான கதையாக இருந்தாலும் படத்தில் இடம்பெற்ற காமெடிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மதகஜராஜா திரைப்படம் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சந்தானம் குறித்து சுந்தர். சி பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, “மதகஜராஜா படத்தை பார்த்தாலே நான் சந்தானத்தை எவ்வளவு மிஸ் பண்றேன் என்பது தெரியும். சந்தானம் இப்போது பெரிய ஹீரோவாகிவிட்டார். அவரை ஒரு நகைச்சுவை நடிகராக அனைவரும் ரொம்பவே மிஸ் பண்றோம். அவர் மீண்டும் நகைச்சுவை நடிகராக நடிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் சுந்தர். சி.
ஏற்கனவே நடிகர் சந்தானம், சுந்தர். சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு, ஆம்பள, அரண்மனை என பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.