இயக்குனர் சுந்தர்.சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர்.சி. இவர் தற்போது நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதே சமயம் விஷாலுடன் மீண்டும் இணையப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தான் சமீபத்தில் ரஜினியின் 173-வது படத்தை, அதாவது தற்காலிகமாக தலைவர் 173 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் புதிய படத்தை சுந்தர்.சி இயக்கப் போவதாகவும், அதனை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ‘அருணாச்சலம்’ படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து இணையும் ரஜினி – சுந்தர்.சி கூட்டணியின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்த நிலையில் இந்த அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். ஆனால் தற்போது சுந்தர்.சி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி அந்த அறிக்கையில், “அனைவருக்கும் இது அதிர்ச்சி தரும் விஷயமாக இருக்கும். கமல், ரஜினி என இரு பெரும் நடிகர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால் சில எதிர்பாராத சூழ்நிலைகளால் தலைவர் 173 படத்தில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுக்க நேரிட்டது. இதனால் ரசிகர்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும். ரஜினி – கமல் இருவரின் ஆசிர்வாதமும் எனக்கு என்றும் இருந்து கொண்டே இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


