நான் பெரிய இயக்குனராக மாறி இருப்பேன் என்று சூப்பர் குட் சுப்ரமணி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சுப்ரமணி. இவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியதால் இவருக்கு சூப்பர் குட் சுப்ரமணி என்ற பெயரும் வந்தது. இவர் ரஜினி முருகன், பிசாசு, முண்டாசுப்பட்டி, பரியேறும் பெருமாள், ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை, மகாராஜா என 500க்கும் மேற்பட்ட படங்களில் பல முக்கிய நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி பெயரையும் புகழையும் பெற்றவர். இதற்கிடையில் இவர் அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்தார். அதுமட்டுமில்லாமல் பெரிய இயக்குனராக வேண்டும் என்பதுதான் இவருடைய லட்சியம். அதன்படி பெரிய நடிகர்களிடம் கதை சொல்லி இருக்கிறார். ஆனால் அது கைகூடி வரவில்லை. இந்நிலையில் தான் சூப்பர் குட் சுப்ரமணி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். அதாவது இவருக்கு புற்றுநோய் 4ஆம் கட்ட நிலையை எட்டி உள்ளதாகவும், மேற்சிகிச்சைக்கு போதிய அளவில் பணம் இல்லை என்பதாலும் தமிழக அரசிடம் பண உதவி கேட்டு இருக்கிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய சூப்பர் குட் சுப்ரமணி, கே.எஸ். ரவிக்குமார், ஹரியை விட பெரிய டைரக்டர் ஆகி இருப்பேன் என்று கூறியிருக்கிறார். அதன்படி அவர், “கே.எஸ். ரவிக்குமார், ஹரி ஆகியோரை விட பெரிய கமர்சியல் இயக்குனராகியிருப்பேன். நான் ஒரு கதை சொன்னால் அதை 10 பேர் திருடி எடுக்கலாம்.
அந்த அளவிற்கு அந்த கதை இருக்கும். எனக்கும் என்னுடைய உதவி இயக்குனர்களுக்கும் நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கும். இயக்குனராக வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம். என் வாழ்க்கையில் தான் எல்லோரும் தப்பு பண்ணியிருக்காங்களே தவிர நான் யாருடைய வாழ்க்கையிலும் தப்பு பண்ணவில்லை. 5000, 10000 க்கு என்னுடைய கதையை கேட்டாங்க. அவங்க கேட்கும் போதே கொடுத்திருந்தால் எனக்கு இப்போது இந்த கஷ்டம் வந்திருக்காது” என்று தெரிவித்துள்ளார்.