நடிகர் சூர்யா தற்போது தனது 42வது படமான கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதே சமயம் நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44 வது திரைப்படத்திலும் நடித்து முடிந்துள்ளார். அடுத்தது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் ஆகிய படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் சூர்யா. இதற்கிடையில் இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரும்புக் கை மாயாவி எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். இது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே நடந்து வந்த நிலையில் இந்த படம் லோகேஷ் கனகராஜின் கனவு திட்டம் என்று அவர் பலமுறை பல இடங்களில் கூறி இருக்கிறார். எனவே ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இருப்பினும் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இரும்புக் கை மாயாவி திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்கப் போவதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வந்தது.
இந்நிலையில் நடிகர் சூர்யா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இரும்புக் கை மாயாவி படம் குறித்து பேசி உள்ளார். அப்போது அவர், “லோகேஷ் கனகராஜின் கனவு திட்டம் இரும்புக் கை மாயாவி திரைப்படமானது மீண்டும் எனக்கு வருகிறதா அல்லது வேறு பெரிய நடிகருக்கு வருகிறதா என்பது தெரியவில்லை. சமீபத்தில் கூட லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஹீரோ ஃபேண்டஸி கதையை அமீர்கானிடம் சொன்னதாகவும் அவர் அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது” என்று தெரிவித்துள்ளார்.