தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலா. இவரது இயக்கத்தில் தற்போது வணங்கான் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்க அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் தான் நேற்று (டிசம்பர் 18) இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அத்துடன் இயக்குனர் பாலாவின் 25 ஆண்டுகால கலைப்பயண விழாவும் இணைத்து நடத்தப்பட்டது. இந்த விழாவில் வணங்கான் படக்குழுவினர் தவிர சிவகுமார், சூர்யா ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் சூர்யா, “பாலா இயக்கிய சேது படம் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நடிகரால் இந்த அளவிற்கு நடிக்க முடியுமா? ஒரு இயக்குனரால் இந்த அளவிற்கு படத்தை இயக்க முடியுமா? என்று தோன்றியது. பல நாட்கள் சேது படத்தின் தாக்கம் எனக்குள் இருந்தது. அப்போதுதான் நான் வேறு ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது பாலா சார் என்னை தொடர்பு கொண்டு உன்னை வைத்து படம் பண்ணுகிறேன் என்று சொன்னார். பாலா சொன்ன வார்த்தை என் வாழ்க்கையவே மாற்றிவிட்டது.
அந்த செல்போன் கால் எனக்கு வரவில்லை என்றால் நான் இப்போது இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன். நந்தா படம் பார்த்துவிட்டு கௌதம் மேனன் சார், காக்க காக்க படத்தில் நடிக்க அழைத்தார். காக்க காக்க படம் பார்த்து ஏ ஆர் முருகதாஸ் கஜினி படத்தில் நடிக்க அழைத்தார். இப்படிதான் அடுத்தடுத்த படங்களில் நடித்தேன். பாலா அண்ணன் என்பது வெறும் வார்த்தை அல்ல, அது உறவு. நிரந்தரமான உறவு. இந்த வாழ்க்கை எனக்கு கொடுத்ததற்கு அவருக்கு என்னுடைய அன்பும் மரியாதையும்” என்றார்.
அதேசமயம், “எனக்கு முதன் முதலில் தம் அடிக்க கற்றுக் கொடுத்தது பாலா தான். நந்தா படத்தின் போது எனக்கு தம் அடிக்க தெரியவில்லை. அதன் பிறகு பலமுறை முயற்சி செய்து கற்றுக் கொண்டேன். அது இப்போது ரோலக்ஸ் கதாபாத்திரம் வரை பயன்படுகிறது” என்று கூறினார் சூர்யா.
வணங்கான் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சூர்யா தான். அதன் பிறகு பாலாவிற்கும் சூர்யாவிற்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா இந்த படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில் வணங்கான் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா, பாலா குறித்து பேசியது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.