நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் இன்று காலை 6.10 மணியளவில் இயற்கை எய்தினார். இந்த தகவல் அறிந்த ரசிகர்களும் தொண்டர்களும் மீள முடியாத சோகத்தில் உறைந்துள்ளனர். சினிமாவிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி ஹீரோவாகவே வாழ்ந்தவர் விஜயகாந்த். சாதி மதம் என அனைத்தையும் வெறுத்து தன்னலம் கருதாத பொது நலவாதியாக வாழ்ந்தவர் விஜயகாந்த். இத்தகைய பெருமைக்குரிய விஜயகாந்த்தின் மறைவிற்கு திரைப்பட பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அவருடன் பணியாற்றிய, பேசிப்பழகிய, சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாதவை…
யார் என்ன கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதே இல்லை..
கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்து புரட்சிக் கலைஞனாக உயர்ந்த அண்ணன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!! pic.twitter.com/PHeqHNG3uk
— Suriya Sivakumar (@Suriya_offl) December 28, 2023
அந்த வகையில் நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில், “விஜயகாந்த் அண்ணன் இறந்த செய்தி மனதுக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஒரு கண்ணில் துணிச்சலும் மறு கண்ணில் கருணைமாய் வாழ்ந்த அபூர்வ கலைஞர். கடை கோடி மக்கள் வரை எல்லோருக்கும் உதவி செய்தவர். அண்ணன் விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சூர்யா விஜயகாந்த்துடன் இணைந்து பெரியண்ணா திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகர் விஜயகாந்தின் உடல் நாளை மாலை 4.45 மணி அளவில் கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.