திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் நடிப்பது தவிர்த்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இதன் மூலம் விஜய் அரசியலில் கால் பதிக்க தொடங்கிவிட்டார் என்று அடிக்கடி சமூக வலைதளங்களில் பல செய்திகள் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துவது, உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்குவது போன்ற நலத்திட்டங்களை செய்து வருகிறார்கள். இச்செயல்பாடுகளினால் விஜயின் ரசிகர்கள் பலரும் விஜய் அரசியலுக்கு வருவார் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
இந்நிலையில் விஜய் மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர் கே கான்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை, பாராட்டு சான்றிதழ், கல்வி விருது போன்றவற்றை வழங்கினார்.

அதுமட்டுமில்லாமல் படிப்பை தாண்டி நற்குணங்களையும் சிந்தனை திறன்களையும் வளர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
அதுமட்டுமில்லாமல் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீர்கள் என்று ஒவ்வொரு மாணவர்களும் அவரவர் பெற்றோர்களிடம் கூறுமாறு அறிவுரை வழங்கினார்.
இது குறித்து பாஜகவை சேர்ந்த எஸ்வி சேகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாகவும் அரசியல் என்பது சம்பாதிக்கக்கூடிய பதவி கிடையாது. மக்களுக்கு சேவை செய்யும் பதவி எனவும் கூறியுள்ளார்.
கடந்த மாதம் ஏற்கனவே எஸ் வி சேகர், “விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார். அதற்கான அனைத்து கட்டமைப்புகளையும் விஜய் தயாராக வைத்துள்ளார். மாற்றம் ஒன்றே மாறாதது. ஒரு மூத்த அரசியல்வாதியாக , மக்களின் நன்மையை மட்டுமே குறிக்கோளாக கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய அறிவுரை” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.