டிசம்பர் மாதம் வந்தாலே பேரிழப்புகள் விடாமல் மக்களை வாட்டி வதைத்து வருகின்றன.அந்த வகையில் சென்னையை மிக்ஜம் புயல் பதம் பார்த்தது. அதைத்தொடர்ந்து எதிர்பாராத விதமாக தென் மாவட்டங்களில் புயலே இல்லாமல் பெரும் மழை கொட்டித் தீர்த்தது. கிட்டத்தட்ட 90 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ததால் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகள் பெரிதளவு பாதிப்படைந்தன. கடந்த 17, 18 தேதிகளில் கொட்டித் தீர்த்த அதி கனமழையால் குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் தேங்கிய வெள்ளம் இன்னும் கூட சில பகுதிகளில் வடியாமல் மக்கள் துன்புற்று வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். இன்று நடிகர் விஜய், நெல்லையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். அதேபோல நடிகர் டி.ராஜேந்தர் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது திடீரென சுயநினைவின்றி மயங்கி விழுந்தார் டி. ராஜேந்தர். இதனால் சுற்றி இருந்த கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவருக்கு தண்ணீர் கொடுத்து தெளிவடைய வைத்தனர். கடந்த சில நாட்களாக ஓய்வின்றி தொடர்ந்து பணி செய்து வந்ததால் அவருக்கு உடல் சோர்வால் மயக்கம் ஏற்பட்டிருக்கிறது என்றும் வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்று அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர். அதன் பிறகு தான் கூட்டத்தில் சலசலப்பு ஓய்ந்து அமைதி திரும்பியது.
- Advertisement -