லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தவர். முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதே சமயம் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார் லோகேஷ். அடுத்ததாக இவர் ரஜினி நடிப்பில் கூலி திரைப்படத்தை இயக்க இருக்கிறார். ரஜினியின் 171 வது படமான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கவுள்ளார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி படம் தொடர்பாக வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. ஏற்கனவே கூலி திரைப்படம் ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகவுள்ளது. மேலும் படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்களுடன் இணைந்து நடிகர் பகத் பாசில் இந்த படத்தில் இணைய உள்ளதாகவும் சமீப காலமாக செய்திகள் பரவி வருகின்றன.
கூலி படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் 10 அன்று தொடங்க இருப்பதாக பல தகவல்கள் வெளியான நிலையில் படப்பிடிப்பு ஒரு சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது. எனவே இதன் படப்பிடிப்பு ஜூலை 1ஆம் தேதி சென்னை மற்றும் ஐதராபாத் பகுதியில் நடைபெற இருப்பதாகவும் அதற்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்படும் வேலைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.