கடந்த ஏப்ரல் 10 அன்று அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. படம் முழுக்க அஜித் ரெபரன்ஸ், பழைய பாடல்கள், மாஸ் சீன்களை வைத்து முரட்டு ஃபேன் பாய் சம்பவம் செய்திருந்தார் ஆதிக். எனவே ரசிகர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு கலகலப்பான அஜித்தை பார்த்ததில் ஆர்ப்பரித்து வருகின்றனர். அத்துடன் படத்தில் இடம்பெற்ற பழைய பாடல்களையும் கொண்டாடி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இசைஞானி இளையராஜா, குட் பேட் அக்லி படக்குழுவுக்கு தன்னுடைய பாடல்களை அனுமதி இன்றி பயன்படுத்தியதற்காக நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விட்பா முதலாவது சர்வதேச மாநாடு நேற்று (ஏப்ரல் 20) நடைபெற்றது.
அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய கங்கை அமரன், “ரூ. 7 கோடி கொடுத்து இசையமைப்பாளர் வச்சிருக்கீங்க. அவர் போட்ட பாடலுக்கு யாரும் கைதட்டல. எங்க பாடலுக்கு தான் கை தட்டுறாங்க. ஏன் ஜோடி மஞ்ச குருவி அது நான் எழுதிய பாட்டு அதுக்கு தான் ரசிகர்கள் கைதட்டுறாங்க. அப்போது எங்களுக்கும் பங்கு இருக்கு. அதை கொடுத்திருக்க வேண்டுமல்லவா? எங்களிடம் அனுமதி வாங்க வேண்டுமல்லவா? அனுமதி கேட்டு இருந்தால் அண்ணன் இலவசமாகவே கொடுத்திருப்பார். கேட்காமல் பயன்படுத்தியதால் தான் அவருக்கு கோபம் வருகிறது. பணம் வேண்டும் என்பதற்காக நாங்கள் இதை பண்ணவில்லை. அது எங்களிடம் கொட்டிக் கிடைக்கிறது. அஜித் படம் என்பதால் ஒன்னும் இந்த படம் வெற்றி அடையவில்லை. எங்க பாட்டு தான் ஜெயிக்க வைக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -