தேவரா 2 படத்தில் டாப் தமிழ் நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜூனியர் என்டிஆர். இவர் தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இவர், ‘தேவரா’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்கியிருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இருப்பினும் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. ஆரம்பத்திலேயே இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகும் என தகவல் கசிந்து இருந்தது. அதன்படி அடுத்தபடியாக இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. எனவே தேவரா 2 கதையில் கொரட்டலா சிவா சில மாற்றங்களை செய்து திரைக்கதையை வலுவாக உருவாக்க உள்ளாராம். அந்த வகையில் இந்த படத்தில் வலுவான கதாபாத்திரம் ஒன்றை வடிவமைத்து, அந்த கதாபாத்திரத்தில் டாப் தமிழ் நடிகர் ஒருவரை நடிக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
மேலும் சிம்பு அந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்ததோடு மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி உள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.


