டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஜப்பானில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
கடந்த மே 1ஆம் தேதி குட் நைட், லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி இருந்தார். இதில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க சிம்ரன் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், மிதுன், கமலேஷ், யோகலட்சுமி ஆகியோரும் நடித்திருந்தனர். பொருளாதார கஷ்டத்தினால் இலங்கையில் இருந்த தமிழ்நாட்டிற்கு வரும் ஒரு குடும்பம் பல சிக்கல்களைக் கடந்து புதிய வாழ்க்கையை எப்படி தொடங்குகிறது என்பதை நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் கொடுத்திருந்தார் அபிஷன். அதேசமயம் சசிகுமார் – சிம்ரன் தங்களின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்த நிலையில், இவர்களின் இளைய மகனான கமலேஷ், நடிப்பில் மற்றவர்களை தூக்கி சாப்பிட்டு விட்டான். இவ்வாறு இந்த படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று நாளுக்கு நாள் வசூலையும் அதிகரித்து வருகிறது. இந்த படத்திற்காக கூடுதல் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மூன்றாவது வாரமாக வெற்றி நடை போடும் இப்படம் உலக அளவில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இப்படம் ரூ.10 கோடியை கடந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வருகின்ற மே 24ஆம் தேதி ஜப்பானில் வெளியாகும் என படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


