திருமணம் குறித்து திரிஷா வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் அமீர் இயக்கத்தில் வெளியான ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் திரிஷா. அதை தொடர்ந்து இவர் விக்ரம், விஜய், சூர்யா, அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி பெயரையும் புகழையும் பெற்றார். இருப்பினும் இடையில் சில சறுக்குகள் ஏற்பட்ட நிலையில் திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. ஆனால் பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் தனது ஸ்டார் அந்தஸ்தை திரும்ப பெற்ற திரிஷா, விஜய், அஜித், சூர்யா என மீண்டும் ஒரு ரவுண்டு வருகிறார். இது தவிர மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்துகிறார். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் 42 வயதுடைய திரிஷா இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
இதற்கிடையில் வருண் என்பவருடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று, பின்னர் அந்த உறவு அப்படியே முடிவுக்கு வந்தது. மேலும் ராணா டகுபதியை காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. அதன் பிறகு திரிஷாவின் திருமணம் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளிவந்தாலும் அதனை திரிஷா மறுத்துக்கொண்டே இருந்தார். இந்நிலையில்தான் திரிஷாவிற்கு சண்டிகரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடைபெற இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்டது.
இது குறித்து திரிஷாவின் தாயார் மறுப்பு தெரிவித்து இருக்கும் நிலையில் திரிஷாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “என் வாழ்க்கையை மற்றவர்கள் பிளான் பண்ணுவது எனக்கு பிடிக்கும். எனவே என்னுடைய ஹனிமூனையும் பிளான் பண்ணி குடுங்க” என்று குறிப்பிட்டு தன்னுடைய திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
