வாத்தி பட கூட்டணி மீண்டும் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வாத்தி எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை வெங்கி அட்லுரி இயக்கியிருந்தார். இதில் தனுஷுடன் இணைந்து சம்யுக்தா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்திருந்தனர். கல்வி சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி, துல்கர் சல்மான் நடிப்பில் லக்கி பாஸ்கர் எனும் திரைப்படத்தை இயக்கி மீண்டும் வெற்றிகண்டார். அடுத்தது இவர், சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சமீப காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் வெங்கி அட்லூரி மீண்டும் தனுஷை வைத்து படம் பண்ண போவதாக வாத்தி படத்தின் தயாரிப்பாளர் வம்சி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே வாத்தி திரைப்படம் அதிக வசூலை வாரிக் குவித்த நிலையில் தனுஷ் – வெங்கி அட்லுரியின் புதிய படமும் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் தனுஷ் தற்போது ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் நிலையில் அதையெல்லாம் முடித்துவிட்டு வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.