- Advertisement -
மலையாள ரசிகர்களால் ஃபாஃபா என்று அன்புடன் அழைக்கப்படுபவர் ஃபகத் ஃபாசில். மலையாள சினிமா மட்டுமன்றி, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஃபகத் ஃபாசில். எல்லா படங்களிலும் தன்னுடைய ஆக்ரோஷமான நடிப்பினால் ஹீரோவையே மிஞ்சி விடுவார். கதாநாயகனாக நடித்திருந்தாலும் சரி வில்லனாக நடித்திருந்தாலும் சரி எந்த படம் என்றாலும் அதில் இவர்தான் ஹீரோ. மலையாளத் திரை உலகில் அறிமுகமான இவர் பல படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிக்காட்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் விக்ரம், புஷ்பா உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார்.

தமிழில் இறுதியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் படத்தில் வில்லனாக நடித்திருப்பார். இப்படத்தில் ரத்னவேலு என்ற கதாபாத்திரம் ஹீரோ கதாபாத்திரத்திற்கு நிகராக பேசப்பட்டது. இதில் பகத் பாஸில் சாதி வெறி கொண்ட வில்லனாக நடித்திருந்தாலும் இவரின் அசாத்தியமான நடிப்பு ரசிகர்கள் இவரை கொண்டாடும் வகையில் அமைந்தது. தற்போது தெலுங்கில் உருவாகி வரும் புஷ்பா இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அதுமட்டுமன்றி ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.




