வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள பேபி ஜான் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வரும் இயக்குனர் அட்லீ, கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து சமந்தா, பேபி நைனிகா, எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதில் விஜய், போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இயக்குனர் அட்லீ, இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். அதன்படி பேபி ஜான் என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தினை அட்லீ தயாரிக்க காலிஸ் இந்த படத்தை இயக்குகிறார். இதில் வருண் தவானுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதைத்தொடர்ந்து டீசரும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி மாலை 5 மணி அளவில் வெளியாகும் என படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மேலும் விஜயின் தெறி படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எப்படி சூப்பர் சூப்பர் ஹிட் அடித்ததோ அதேபோல் பேபி ஜான் பட பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.