ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூலில் பட்டையக் கிளப்பிக் கொண்டு இருக்கிறது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்னா, விநாயகன் என பலர் நடித்துள்ளனர்.
சிவராஜ்குமார், மோகன்லால் மற்றும் ஜாக்கி ஷராப் உள்ளிட்டோர் சிறப்புக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்தே தற்போது வரை ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழக மட்டுமில்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் 375 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. தமிழ் சினிமாவிலேயே இதுவரை எந்த படமும் எட்டாத வசூலை இப்படம் ஒரே வாரத்தில் எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அதில் படக்குழுவினர் பெரும்பாலானோர் கலந்துகொண்டனர்.
அதில் பேசிய வசந்த் ரவி,
“நெல்சன் என்னை இந்தப் படத்திற்காக கேட்ட போது, படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம், நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இது உங்களுக்கு நிச்சயமாக நல்ல பெயர் கொடுக்கும் என்று நெல்சன் சொன்னார்.
இன்று அவர் சொன்னது நிறைவேறி உள்ளது. அனிருத் இசையில் ஒரு பாடலாவது நடிக்க வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கும். ஆனால் அவரது இசையில் ரஜினி சாருடனேயே இணைந்து ரத்தமாரே பாடலில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஜெயிலர் என்னுடைய திரையுலகப் பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்துவிட்டது.ரஜினி சாருடன் இணைந்து ஒரு காட்சியிலாவது நடித்து விட மாட்டோமா என ஒவ்வொரு நடிகருக்கும் கனவு இருக்கும். தற்போது அது எனக்கு நிறைவேறி உள்ளது. நான் சினிமாவில் நடிக்க விரும்பியபோது முதன் முறையாகச் சென்று சந்தித்தது ரஜினி சாரைத் தான். அப்போது எங்கள் இருவருக்குமே தெரியாது இருவரும் இணைந்து நடிப்போம் என்று.
அதன்பிறகு தரமணி, ராக்கி என எனது படங்களைத் தொடர்ந்து பாராட்டி என்னை ஊக்கப்படுத்தி வருகிறார். ஜெயிலர் படம் முடியும் கடைசி நாளன்று எனக்கு ரொம்பவே எமோஷனலாக இருந்தது.
ரஜினி சாரிடம் போய் இன்னைக்கு தான் இந்தப் படத்தில் எனக்குக் கடைசி நாள், உங்களை நான் ரொம்பவே மிஸ் பண்ணுவேன். மீண்டும் உங்களுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறினேன். கண்டிப்பாக பண்ணலாம் என்று என்னிடம் கூறினார். இந்தப் படம் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றதற்கு நெல்சன் சார் மிக முக்கியக் காரணம். அஸ்வின், முத்துவேல் பாண்டியன் என்கிற இந்த கதாபாத்திரம் எப்போதும் என் வாழ்க்கையில், என் இதயத்தில் நிரந்தரமாக இருக்கும்” என்று கூறினார்.
“ரஜினி சார் உடன் நடிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறிவிட்டது”… ஜெயிலர் வெற்றி விழாவில் வசந்த் ரவி!
-