இயக்குனர் வெங்கட் பிரபு தனது அடுத்த படம் குறித்து அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சென்னை 600028 படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் வெங்கட் பிரபு. சரோஜா, கோவா ஆகிய படங்களையும் இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதிலும் அஜித்தின் 50வது படமாக இவர் இயக்கியிருந்த மங்காத்தா திரைப்படம் வேற லெவல் ஹிட் அடித்தது. அதன் பிறகு சிம்புவிற்கு மாநாடு என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தையும் கொடுத்தார் வெங்கட் பிரபு. கடைசியாக இவர் விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் சென்னை 600028 பாகம் 3 படத்தை இயக்கப் போவதாகவும், அக்ஷய் குமார் நடிப்பில் புதிய படம் ஒன்று இயக்கப் போவதாகவும் பேச்சுகள் அடிபட்டது. இதை தவிர வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் பல தகவல்கள் வெளிவந்த நிலையில், சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்வில் தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அடுத்த படத்திற்காக சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைக்க இருப்பதை உறுதி செய்துள்ளார் வெங்கட் பிரபு. இதன்மூலம் விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.