இயக்குனர் வெற்றிமாறன் அரசன் படம் பற்றி முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர், பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், விசாரணை, விடுதலை ஆகிய வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். கடைசியாக இவரது இயக்கத்தில் ‘விடுதலை பாகம் 2’ திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து இவர், சிம்பு நடிப்பில் அரசன் எனும் திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படமானது சிம்புவின் 49வது படம் ஆகும். இதனை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார்.
‘வடசென்னை’ படத்தின் யுனிவர்ஸாக உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னரே படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் செம வைரலாகி வந்தது. அதே சமயம் இந்த படத்தில் வில்லனாக நடிக்க வைக்க கிச்சா சுதீப், உபேந்திரா ஆகியோர்களிடமும், கதாநாயகியாக நடிக்க வைக்க சமந்தா, சாய் பல்லவி ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இது தவிர இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி தொடங்கும் என ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது.
தற்போது இதனை வெற்றிமாறனும் உறுதி செய்திருக்கிறார். அதாவது வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்க்’ படத்தின் நிகழ்ச்சியின் போது ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 24-ஆம் தேதி தொடங்கும் என்று கூறி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் வெற்றிமாறன்.


