கவின் நடிக்கும் மாஸ்க் படத்தின் லேட்டஸ்ட் தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் கவின் தமிழ் சினிமாவில் பீட்சா, இன்று நேற்று நாளை ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடிக்க தொடங்கியவர். அதன் பின்னர் இவர், நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். மேலும் லிஃப்ட், டாடா ஆகிய தொடர் வெற்றி படங்களை கொடுத்து ஒரு சிறந்த கதாநாயகனாக தன்னை நிரூபித்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான ஸ்டார், ப்ளடி பெக்கர் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இருப்பினும் நடிகர் கவினுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே கிஸ், ஹாய் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் கவின். இதற்கிடையில் இவர் மாஸ்க் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்க விகர்ணன் அசோக் இந்த படத்தை இயக்குகிறார். இதில் கவினுக்கு வில்லியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. அடுத்தது இந்த படத்தை 2025 மே மாதத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சமீப காலமாக மாஸ்க் திரைப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என பல தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன. ஏற்கனவே கவினின் ஸ்டார் படத்தில் வெற்றிமாறன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ஆதலால் இந்த படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்க வாய்ப்புள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை என படக்குழு தரப்பில் சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.