இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் என தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். கடந்தாண்டு இவரது இயக்கத்தில் விடுதலை திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன் . இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. இதற்கிடையில் வெற்றிமாறன், சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். இவர்களது கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி காளைகளை வைத்து பல பயிற்சிகளும் எடுக்கப்பட்டது. அதன் பின்னர் வெற்றிமாறன் விடுதலை 2 படத்தில் பிஸியாகி விட்டதால் வாடிவாசல் படம் தொடர்பான அப்டேட் எதுவும் வெளிவரவில்லை. ஆகையினால் வாடிவாசல் திரைப்படம் கைவிடப்பட்டதாக பல வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது. இந்த நிலையில் இது தொடர்பாக இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “விரைவில் வாடிவாசல் திரைப்படம் தொடங்க இருக்கிறது. விடுதலை படத்திற்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கப்படும்” என்று கூறியுள்ளார். மேலும் அவரைத் தொடர்ந்து பேசிய கலைப்புலி தாணு, “உலகத் தமிழர்களுக்கு வாடிவாசல் திரைப்படம் அங்கீகாரமாக அமையும்” என்று தெரிவித்துள்ளார். எனவே வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்குவது சம்பந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.