விடாமுயற்சி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி எனும் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். அதற்கு முன்னதாக இவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான படம் தான் விடாமுயற்சி. இந்த படம் அஜித்தின் 62 ஆவது படமாகும். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்கியிருந்தார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். ஓம் பிரகாஷ் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இதில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் அஜித் – திரிஷா ஆகிய இருவருக்கும் இடையிலான காதல் குறித்து காண்பிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் நடிகர் அஜித் மூன்று விதமான தோற்றத்தில் நடித்திருந்தார். அஜித்தின் மற்ற படங்களைப் போல் அல்லாமல் வெளியாகி இருந்த இந்த படம் ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் மற்றொரு தரப்பு ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை. இந்நிலையில் இப்படம் 2025 மார்ச் 3ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.