விஜய் ஆண்டனியின் 26ஆவது பட டைட்டில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் விஜய் ஆண்டனி. அதே சமயம் நடிப்பதிலும் ஆர்வமடைய இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் வள்ளி மயில், சக்தித் திருமகன், மார்கன் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இதற்கிடையில் இன்னும் பல படங்களிலும் கமிட்டாகி வருகிறார் விஜய் ஆண்டனி. அதன்படி இவர், கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்த ஜென்டில்வுமன் படத்தின் இயக்குனர் ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக ஏற்கனவே பல தகவல்கள் வெளிவந்தது. அதன்படி தற்போது ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும், டைட்டிலும் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு லாயர் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இப்படத்தில் விஜய் ஆண்டனி, வழக்கறிஞராக நடிக்க உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிப்பு போஸ்டரில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும், படமானது தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.