விஜய் சேதுபதி – நித்யா மேனனின் தலைவன் தலைவி திரைப்படம் 25வது நாளாக வெற்றி நடைபோடுகிறது.
தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய் சேதுபதியும், நடிகை நித்யா மேனனும் நடித்திருந்த திரைப்படம் தான் ‘தலைவன் தலைவி’. இந்த படத்தை கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கியிருந்தார்.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்திருந்தார். சுகுமார் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க பிரதீப் ஈ ராகவ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருந்தார். பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளும் விஜய் சேதுபதிக்கும் – நித்யா மேனனுக்கும் இடையில் ஏற்படும் குடும்ப பிரச்சனையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இந்த படத்தின் வெற்றி விழா சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஜூலை 25ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம் வருகிற ஆகஸ்ட் 22ஆம் தேதி இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்த படம் (ஆகஸ்ட் 18) 25வது நாளாக திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


