நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களை கலக்கி வருகிறார். கடைசியாக இவர்கள் நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து இவரது நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை 2 திரைப்படம் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து ட்ரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. அதன்படி நேற்று (நவம்பர் 26) இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது விஜய் சேதுபதி இயக்குனர் வெற்றிமாறன் குறித்து பேசி உள்ளார்.
அவர் பேசியதாவது, “இந்த படத்தை முழுக்க முழுக்க வெற்றிமாறன் மட்டுமே உரிமை கொண்டாட முடியும். இந்த படத்தை உருவாக்க நாங்கள் உறுதுணையாக இருந்திருக்கிறோம் என்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. இது அவ்வளவு எளிதாக உருவாக்கக்கூடிய படம் கிடையாது. ஆனால் அவரும் அவரது குழுவும் இணைந்து அவருக்கு பின்னால் உறுதுணையாக இருந்திருக்கிறோம். நான் மூன்று வருடம் பி. காம் படித்தேன். ஆனால் வெற்றிமாறன் என்ற பல்கலைக்கழகத்தில் நான்கு வருடங்கள் படித்து விடுதலை என்ற பட்டத்தை வாங்கி இருக்கிறேன். ஒரு படத்தில் நடிக்கும் போது ஒரு வசனத்தை இயக்குனர் எதற்காக எழுதி இருக்கிறார் என்பதை ஆழமாக புரிந்து கொள்ள முயற்சி செய்து அதில் திருப்தியாக நடிக்க வேண்டும் என்று முயற்சிப்பேன்.
இந்த படத்தைப் பொறுத்தவரை நடிப்பது தவிர அந்த வசனத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று நான் பலரிடமும் ஆலோசிக்கும் அளவிற்கு வெற்றிமாறன் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். புதுப்புது வார்த்தைகளை எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். இந்த படத்தைப் பொறுத்தவரை வாத்தியார் நான் இல்லை வெற்றிமாறன் தான். நான் அவரிடம் பயின்ற ஒரு மாணவன். அவரிடம் இருந்து கற்றுக் கொண்டது மிகப்பெரியது” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -