நடிகர் விஜய், ஜனநாயகன் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜயின் 69 ஆவது படமாக உருவாகும் திரைப்படம் தான் ஜனநாயகன். இந்த படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதன் இசையமைப்பாளராகவும், சத்யன் சூரியன் இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகின்றனர். அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் விஜய், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
அடுத்தது இதன் முதல் பாடல் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இது தவிர படத்தில் பல சர்ப்ரைஸ்கள் இருப்பதாகவும் பல தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை மேன்மேலும் அதிகமாக்கி வருகின்றன. இந்நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது கடந்த சில வருடங்களாக வெளியான விஜய் படங்களுக்கு ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களினால் இசை வெளியீட்டு விழா எதுவும் நடத்தப்படவில்லை.
ஆனால் ‘ஜனநாயகன்’ படத்திற்கு பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக இந்த ஆண்டு இறுதியில் (டிசம்பர் மாதத்தில்) இதன் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் இப்பொழுதே கொண்டாட தயாராகி விட்டார்கள். மேலும் ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் படமானது 2026 ஜனவரி 9 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


