கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி விஜய் நடிப்பில் லியோ எனும் திரைப்படம் வெளியானது. நடிகர் விஜயின் 67 வது படமான இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்த இந்த கூட்டணி, படத்தின் மீதான அதிக எதிர்பார்ப்பிற்கு காரணமாக அமைந்தது. அதன்படி இந்த படமும் வெளியாகி கிட்டத்தட்ட 627 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. ஆனால் முதல் பாதியை விட இரண்டாம் பாதி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. அதாவது முதல் பாதியில் கழுதைப்புலி காட்சி பெரிய அளவில் பேசப்பட்டது. இரண்டாம் பாதியில் நரபலி போன்ற பல விஷயங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. இது குறித்து லோகேஷ் கனகராஜ், லியோ படத்தின் ஃப்ளாஷ் பேக் போர்ஷன் பொய்யானது. மன்சூர் அலிகானின் பெர்ஸ்பெக்டிவில் உருவாக்கப்பட்டது என்று தனது தரப்பு விளக்கத்தை கொடுத்திருந்தார். இருந்த போதிலும் இந்த படம் 2023 ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதனை லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அத்துடன் இந்த படம் இன்றுடன் (அக்டோபர் 19, 2024) ஓராண்டை நிறைவு செய்துள்ளது.
மேலும் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, மேத்யூ தாமஸ், சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.