விக்ரம் பிரபு நடித்த லவ் மேரேஜ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் கும்கி, அரிமா நம்பி, சிகரம் தொடு உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் விக்ரம் பிரபு. இவர் தற்போது தெலுங்கில் அறிமுகமாகி அனுஷ்காவுடன் இணைந்து ‘காட்டி’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் இவர், தமிழில் லவ் மேரேஜ் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை சண்முகப்பிரியன் இயக்க ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. ஷான் ரோல்டன் இந்த படத்தின் இசையமைப்பாளராகவும் மதன் கிறிஸ்டோபர் இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி இருந்தனர். ஒருவருக்கு, தாமதமாகும் திருமணத்தால் குடும்பத்திலும், சமூகத்திலும் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன? என்பதை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இதில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து சுஷ்மிதா பட், மீனாட்சி, ரமேஷ் திலக், அருள்தாஸ், முருகானந்தம் மற்றும் பலர் நடித்திருந்தனர். சத்யராஜ் இப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இப்படம் நாளை (ஆகஸ்ட் 29) அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.