சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வீர தீர சூரன். இந்த படத்தை சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ளார். இதில் விக்ரமுடன் இணைந்து துஷாரா, எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருந்த இந்த படம் இன்று (மார்ச் 27) காலை 9 மணிக்கு திரையிடப்பட வேண்டியது. ஆனால் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக இந்த படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. பின்னர் தடைகளை எல்லாம் உடைத்து இன்று மாலை 6 மணி முதல் திரையிடப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தை பற்றி விமர்சனமாக பார்க்கலாம்.
படத்தின் ஆரம்பத்திலேயே கதை தொடங்கி விடுகிறது. அதாவது போலீஸ் அதிகாரியாக இருக்கும் எஸ்.ஜே. சூர்யா, பழைய பகை ஒன்றை மனதில் வைத்துக்கொண்டு சுராஜை கொல்ல திட்டமிடுகிறார். இதை அறிந்த சுராஜ், விக்ரமிடம் உதவி கேட்கிறார். எஸ்.ஜே. சூர்யாவை தீர்த்து கட்டிவிடலாம் என்று சுராஜ் திட்டம் போட்டு கொடுக்கிறார். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை.
இந்த படத்தில் விக்ரம், சுராஜ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் தங்களின் நடிப்பில் மிரட்டி இருக்கின்றனர். அதிலும் விக்ரமின் என்ட்ரி மாஸ். அதேசமயம் மலையாள நடிகர் சுராஜ், தமிழ் மொழியை கற்றுக்கொண்டு படத்தில் அவர் கொடுத்த ரியாக்ஷன்கள் வேற லெவல். வழக்கம்போல் எஸ்.ஜே. சூர்யா பட்டைய கிளப்பியுள்ளார். துஷாரா விஜயனும் ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். அதேபோல் ஜி.வி. பிரகாஷின் இசையும் இந்த படத்திற்கு பலம் தந்துள்ளது.
அடுத்தது பொதுவாகவே சினிமாவில் முதல் பாகம் வெளியான பின்னர் தான் இரண்டாம் பாகம் வெளியாகும். ஆனால் இயக்குனர் அருண்குமார், முதலில் பார்ட் 2 கதையை வெளியிட்டு வித்தியாசமான உக்தியை கையாண்டு தன் கதையின் மீதான ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். விக்ரமை எப்படி காட்டினால் ரசிகர்களுக்கு பிடிக்குமோ அப்படி காட்டியிருக்கிறார் அருண்குமார். மேலும் திரைக்கதை எந்த இடத்திலும் சலிப்பை ஏற்படுத்தாமல் நகர்வதும், ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தேர்வு படத்திற்கு பிளஸ் பாயிண்ட்களாக அமைந்துள்ளது.
வித்தியாசமான இன்டர்வெல், கூஸ்பம்ஸ் தரும் கிளைமாக்ஸ் போன்றவை தூள் கிளப்பியுள்ளது. அதிலும் கிளைமாக்ஸில் ஒரே ஷாட்டில் அனைவரும் நடித்து அசத்தியிருப்பது இந்த படத்தின் முதல் பாகத்தின் மீதான ஹைப்பை அதிகப்படுத்தி உள்ளது. மொத்தத்தில் வீர தீர சூரன் – வெறித்தனமான ஆட்டம்.