விஷ்ணு விஷால் நடிக்கும் ஆர்யன் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஷ்ணு விஷால், ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’, ‘கட்டா குஸ்தி’ என பல வெற்றி படங்களில் நடித்து பெயர் பெற்றார். தற்போது இவர் ‘ஓர் மாம்பழ சீசனில்’, ‘இரண்டு வானம்’ ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர், பிரவீன். கே இயக்கத்தில் ஆர்யன் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் போலிஸ் அதிகாரியாக நடிக்க அவருடன் இணைந்து செல்வராகவன், வாணி போஜன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை விஷ்ணு விஷால் தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க சாம். சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டது. பின்னர் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்திவைக்கப்பட்ட இதன் படப்பிடிப்பு, நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இந்த படத்தினை 2025 அக்டோபர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படமானது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகும் என தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.