விஷ்ணு விஷால் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். அந்த வகையில் இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
ஆர்யன்

விஷ்ணு விஷால், ஆர்யன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வாணி போஜன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அவினாஷ், மாலா பார்வதி, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை பிரவீன் கே எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் விஷ்ணு விஷால் தயாரித்துள்ளார். விஷ்ணு சுபாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் இசையமைத்துள்ளார். கிரைம் திரில்லர் கதைகளத்தில் உருவாக்கியுள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் விஷ்ணு விஷால் ராட்சசன் படத்திற்கு பிறகு போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் நடித்துள்ளார். தற்போது விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மோகன்தாஸ்
அதேசமயம் விஷ்ணு விஷால் சைக்கோ திரில்லர் படமான மோகன்தாஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன், மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை முரளி கார்த்திக் இயக்கியுள்ளார். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்ய, சுந்தரமூர்த்தி கே எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் சுப்ரா மற்றும் ஆரியன் ரமேஷ் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
லால் சலாம்
அடுத்ததாக விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷால் மற்றும் விக்ராந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார். இந்நிலையில் நான் சலாம் படக்குழுவினர் விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷாலின் கதாபாத்திரமான திருநாவுக்கரசு என்ற பெயரைக் குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும் இவர்களுடன் விஷ்ணு விஷால் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராட்சசன் 2
விஷ்ணு விஷால் ,முண்டாசுப்பட்டி ராட்சசன் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். விஷ்ணு விஷாலின் 21 வது படமான இந்த படம் ராட்சசன் படத்தின் இரண்டாவது பாகமாக உருவாக உள்ளது. இந்த புதிய படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விஷ்ணு விஷால், தனுஷ் இயக்கி நடிக்கும் 50 வது படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.