இயக்குனர் சுந்தர்.சி, தலைவர் 173 படத்தில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் தலைவர் 173 படம் உருவாக இருப்பதாகவும், அதனை சுந்தர்.சி இயக்கப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்த நிலையில் ரசிகர்கள் அதனைக் கொண்டாட தயாரானார்கள். ஆனால் அதற்குள் சுந்தர்.சி, ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் ‘தலைவர் 173’ படத்தில் இருந்து, தான் விலகுவதாக குறிப்பிட்டிருந்தார்.
‘அருணாச்சலம்’ படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் இந்த கூட்டணியின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. ஆனால் சுந்தர்.சி வெளியிட்ட அறிக்கை பலரையும் ஏமாற்றமடையச் செய்தது. அதேசமயம் சுந்தர்.சி இந்த படத்தில் இருந்து விலகியதற்கான காரணம் என்னவாக இருக்கும்? என்று பலரும் சமூக வலைதளங்களில் விவாதிக்க தொடங்கினர். அந்த வகையில் ‘தலைவர் 173’ படத்தில் இருந்து சுந்தர்.சி விலகியதற்கான சில காரணங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது சுந்தர்.சி, ‘தலைவர் 173’ படத்திற்கான ஸ்கிரிப்ட்டை தயார் செய்த நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன் சில திருத்தங்களை செய்ய சொல்லி இருக்கிறார். தொடர்ந்து அவர் திருத்தங்களை செய்ய சொல்ல, அதனால் கோபத்தில் தான் சுந்தர். சி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இது தவிர ரஜினியிடம், சுந்தர்.சி முழு ஸ்கிரிப்ட்டையும் பகிர்ந்த நிலையில் ரஜினிக்கு இதில் திருப்தி இல்லை என்று கூறிவிட்டாராம்.
அதாவது சுந்தர்.சி, கலகலப்பான கதையை கூறியிருக்கிறார். அதில் மாஸ் காட்சிகள், ஸ்டைல் போன்றவை இருக்கும்படி விரும்பினாராம் ரஜினி. எனவே இது தனக்கு சரியான திட்டமாக இருக்காது என்று புரிந்து கொண்ட சுந்தர்.சி, ‘தலைவர் 173’ படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் மற்றொரு தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் சுந்தர்.சியிடம் மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.


