நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமைகளை கொண்டவர். அந்த வகையில் தனுஷ் நடிப்பில் உருவான கேப்டன் மில்லர் படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இதைத்தொடர்ந்து தனுஷ் தனது 51 வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் சேகர் கம்முலா இயக்க உள்ளார். தற்காலிகமாக D51 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனமும், அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய அளவில் வெளியாக இருக்கிறது. இது சம்பந்தமான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பாகவே வெளியானது. அதேசமயம் இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நடிக்க உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் D51 படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதன் கூடுதல் தகவலாக மும்பை, கொச்சின் உள்ளிட்ட பகுதிகளில் இதன் முதற்கட்ட படப்பிடிப்புகள் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.