கங்குவா படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
கங்குவா திரைப்படமானது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஞானவேல் ராஜா, ஸ்டூடியோகிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். 3D தொழில்நுட்பத்தில் பீரியாடிக் படமாக உருவாகி இருக்கும் இந்த படமானது மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ளது. வருகின்ற அக்டோபர் 10 அன்று 10க்கும் மேலான மொழிகளில் இந்த படம் உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. இந்த படத்தில் பாபி தியோல், நட்டி நடராஜ் ஆகியோர் வில்லன்களாக நடிக்க யோகி பாபு, கோவை சரளா, திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் நடிகர் கார்த்தியும் இணைந்துள்ளார் என்று கிட்டத்தட்ட உறுதியான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து சமீபத்தில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. இருப்பினும் இப்பாடல் அம்மன் பாடல் போன்ற இருப்பதாக ரசிகர்கள் பலரும் விமர்சித்து வந்தனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் படத்தின் கதைக்கேற்ப பழங்குடியினர் அவர்களது குலதெய்வத்தினை வேண்டும் பாடலாக கூட இது இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் இந்த ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியாகும் என்று புதிய தகவல் வெளிவந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.