அஜித்தின் குட் பேட் அக்லி பட ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் 63 வது படமாக உருவாகியிருந்த குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தை அஜித்தின் தீவிர ரசிகனான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். அபிநந்தன் ராமானுஜம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில், கார்த்திகேயா தேவ், பிரியா வாரியர் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஆக்சன், மாஸ், சென்டிமென்ட் கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் அஜித் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர். இப்படி ஒரு படத்தை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்ததற்காக ஆதிக் ரவிச்சந்திரனையும் பாராட்டி வருகின்றனர். அதன்படி இப்படம் உலக அளவில் தற்போது வரை ரூ. 250 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் இப்படம் ரூ. 140 கோடி வசூலை நெருங்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற மே மாதம் 8ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.