ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
ரஜினி நடிப்பில் சமீபத்தில் ‘கூலி’ திரைப்படம் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த 2023 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. அதிரடி ஆக்சன் படமாக வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து கிட்டத்தட்ட ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. அனிருத்தின் இசையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருந்தது. அடுத்தது ரஜினி- நெல்சன்- அனிருத் கூட்டணியில் ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திலும் முதல் பாகத்தில் நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இன்னும் பல நட்சத்திரங்கள் நடிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. மேலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வரும் நிலையில் இப்படத்தின் அறிவிப்பு டீசரும் வெளியாகி இணையத்தில் வைரலானது. அதன் பின்னர் படப்பிடிப்புகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. அதன்படி கிட்டத்தட்ட 50 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஜெயிலர் 2 படமானது அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான கூலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் ஜெயிலர் 2 திரைப்படம் நிச்சயம் ஆயிரம் கோடி ரூபாயை அள்ளிவிடும் என்று ரசிகர்கள் இப்படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.