தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரகளில் ஒருவராக வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். இவர் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து பெயரையும் புகழையும் பெற்று வருகிறார். சமீபத்தில் ‘வாத்தி’ படத்தில் இசையமைத்ததற்காக ஜி.வி பிரகாஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் ஜி.வி. பிரகாஷ் – சைந்தவியின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்த ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் இருவரும் இணைந்து தங்களின் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். அந்த வகையில் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. ஆனால் திடீரென ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி இருவரும் தங்களின் திருமண உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்தனர். மேலும் குடும்ப நல நீதிமன்றத்தில் தங்களுக்கு விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை குடும்ப நல நீதிமன்றம் இருவருக்கும் 6 மாத காலம் அவகாசம் வழங்கியிருந்தது. அதன் பின்னர் மீண்டும் இந்த வழக்கு நேற்று (செப்டம்பர் 25) விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி செல்வ சுந்தரி இரு தரப்பு வாதங்களையும் கேட்டு பதிவு செய்து கொண்டார்.
மேலும் உங்களுடைய பெண் குழந்தையை யார் பார்த்துக் கொள்ளப் போகிறீர்கள்? என்ற கேள்வியும் எழுப்பினார். அதற்கு ஜி.வி. பிரகாஷ், குழந்தையை சைந்தவி பார்த்துக் கொள்வதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். எனவே இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி தீர்ப்பளிப்பதாக உத்தரவிட்டுள்ளார்.