கடந்த டிசம்பர் 4ஆம் தேதி அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியிருந்த புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி ஐதராபாத்தில் சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டது. அப்போது அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வந்த நிலையில் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு ரேவதி என்ற பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்த நிலையில் இது தொடர்பான வழக்கில் அல்லு அர்ஜுன் மற்றும் திரையரங்கு உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் இன்று (டிசம்பர் 24) உயிரிழந்த பெண் விவகாரத்தில் சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுனிடம் விசாரணை நடைபெற்றது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் விசாரணை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. அந்த விசாரணையில் அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வந்த நேரமும், பெண் உயிரிழந்த தகவல் எப்போது தெரிவிக்கப்பட்டது போன்றது தொடர்பான 20 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதற்கிடையில் கூட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழந்ததற்கு நேரடியாக அல்லு அர்ஜுனை தாக்குவது எந்தவித நியாயமும் இல்லை என பலரும் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் புஷ்பா 2 படத்தின் வெற்றி விழாவில்
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பெயரை மறந்ததனால் தான் அல்லு அர்ஜுன் திட்டமிட்டு கைது செய்யப்பட்டார். ரேவந்த் ரெட்டிக்கு நெருக்கமானவர்கள் தான் அல்லு அர்ஜுனை துரத்தி துரத்தி அடிக்கின்றனர் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் நடிகர் அல்லு அர்ஜுன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது தன் பெயரை வேண்டுமென்றே சிலர் கெடுக்க நினைக்கிறார்கள் என்று பேசியிருந்தார். இதைத்தொடர்ந்து அல்லு அர்ஜுன் வீட்டின் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இவ்வாறு இந்த விவகாரம் இடைவெளியே இல்லாமல் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒருமுறை ரேவந்த் ரெட்டியின் பெயரை மறந்த அல்லு அர்ஜுன் இனிமேல் அந்த பெயரை தன்னுடைய வாழ்நாளில் மறக்கவே மாட்டார் என்று சமூக வலைதளங்களில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
- Advertisement -