பாலிவுட் திரையுலகமே ரிவர்ஸ் கியரில் பின்னோக்கி சென்று கொண்டிருந்தபோது, சட்டென்று கியரை மாற்றி மின்னல் வேகத்தில் தலா ஆயிரம் கோடியை அடித்து நொறுக்கியது ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் மற்றும் ஜவான் திரைப்படங்கள். இதில் ஜவான் திரைப்படம் பல்வேறு தென்னிந்திய நடிகர் மற்றும் கலைஞர்கள் பங்கேற்பினால் உருவாக்கப்பட்டது. படத்தில் இயக்குனர் அட்லீ, வில்லனாக விஜய் சேதுபதி, கதாநாயகி நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத், ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு என படத்தில் பணியாற்றிய முக்கிய கலைஞர்கள் அனைவரும் தமிழ் திரையுலகினரே. ஜவான் திரைப்படம் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனையை படைத்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் படத்தின் மேக்கிங், படத்திற்கு பக்கபலமாக அமைந்திருந்தது. ஹாலிவுட்டால் நடத்தப்படும் “அஸ்த்ரா 2024” விருது விழாவில் சிறந்த பன்னாட்டு திரைப்படங்கள் பரிந்துரை பட்டியலில் ஷாருக்கான் ஜவான் படம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்த லிஸ்டில் ஜவானுக்கு போட்டியாக அனாட்டமி ஆப் ஃபால் (பிரான்ஸ்), கான்கிரீட் யுடோபியா (தென்கொரியா), ஃபாலன் லீவ்ஸ் (ஃபின்லாந்து), பெர்ஃபெக்ட் டேஸ் (ஜப்பான்), ரேடிகல் (மெக்சிகோ), சொசைட்டி ஆப் த ஸ்னோ (ஸ்பெயின்), தி டேஸ்ட் ஆப் திங்ஸ் (ஃபிரான்ஸ்), தி டீச்சர்ஸ் லாஞ்சி (ஜெர்மனி), தி ஆப் இன்ட்ரெஸ்ட் (யுனைடெட் கிங்டம்) போன்ற படங்களும் இந்த பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் எந்த படம் விருதை வெல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும் ஜவான் இந்த லிஸ்டில் இடம் பெற்றிருப்பது இந்திய சினிமாவுக்கு கிடைத்த பெருமை என்றும் ரசிகர்கள் வலைதளங்களில் மகிழ்ச்சியோடு பதிவிட்டு வருகின்றனர்.