உதயநிதிக்காக தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வீர்களா? என்ற கேள்விக்கு நடிகர் சந்தானம் பதில் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சந்தானம். இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் இவர் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் வருகின்ற மே 16 உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இது தவிர சந்தானம், சிம்பு நடிப்பில் உருவாகும் STR 49 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் சந்தானத்திடம், சிம்பு அழைத்தார் என்பதற்காக காமெடியனாக நடிக்க ஒப்புக்கொண்டீர்கள்? அதேபோல் உதயநிதி, தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்தால் செல்வீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சந்தானம், “அரசியலைப் பொறுத்தவரை யார் கூப்பிட்டாலும் ஒரு விஷயத்தை நான் தெளிவாக சொல்ல விரும்புகிறேன். நீங்கள் உழைத்தால் உங்களுக்கு சாப்பாடு. நான் உழைத்தால் எனக்கு சாப்பாடு. ஆனால் நட்பு ரீதியாக சில விஷயங்கள் இருக்கிறது. சில விஷயங்களை பண்ண முடியும். சில விஷயங்களை பண்ண முடியாது என்று இருக்கிறது. சிம்பு, STR 49 படத்தில் என்னை நடிக்க அழைத்தாலும் எனக்கு எது வசதியாக இருக்கும், என்னால் என்ன செய்ய முடியும் என்ற சுதந்திரத்தை எனக்கு கொடுத்து இருக்கிறார். பழைய நகைச்சுவையை பண்ண வேண்டும் என்று அவர் என்னை வற்புறுத்தவில்லை. அதே மாதிரி உதய் சார் என்னை அழைத்தாலும் என்னால் அதை செய்ய முடியும் என்றால் நிச்சயம் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.