யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
கே.ஜி.எஃப் சாப்டர் 1 மற்றும் சாப்டர் 2 ஆகிய படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் யாஷ். இதைத்தொடர்ந்து யாஷின் அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் யாஷ், ரன்பீர் கபூர் – சாய் பல்லவி நடிக்கும் ராமாயணா படத்தில் ராவணனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் யாஷின் கெட்டப்பையும், அவருடைய நடிப்பையும் பார்க்க ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் யாஷ், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் தனது 19 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டாக்ஸிக் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் யாஷுடன் இணைந்து நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மினி வசந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த பல மாதங்களாக பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படமானது 2026 மார்ச் 19ஆம் தேதி திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘டாக்ஸிக்’ படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்களை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்தப் புகைப்படங்களில் நடிகர் யாஷ் இரண்டு விதமான கெட்டப்பில் இருக்கிறார். அதில் ஒரு புகைப்படத்தில் அடர்ந்த தாடி மற்றும் நீளமான முடியுடன் இருக்கிறார். மற்றொன்றில் நீளமான முடி இல்லாமல் இருக்கிறார். இந்த இரண்டு கெட்டப்புமே மிரட்டலாக இருக்கிறது. ஏற்கனவே யாஷ் இப்படத்தில் வழக்கறிஞராக நடிக்கிறார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.