யோகி பாபுவின் 38 வது பிறந்த நாள் இன்று.
யோகி பாபு தற்போது பிரபல நடிகராக வலம் வருபவர். நகைச்சுவை நடிகரான இவர் தற்போது கதாநாயகனாகவும் பல படங்களில் ந
தன் நடிப்பு திறமையை வெளிக்காட்டி வருகிறார். மேலும் ரஜினி, சிவகார்த்திகேயன், விஜய், ஷாருக்கான், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். தற்போதயெல்லாம் நகைச்சுவை என்றாலே அனைவரின் மனதிலும் யோகி பாபு என்ற பெயர்தான் ஒலிக்கிறது.
சமீபகாலமாக யோகி பாபு இல்லாத படங்களையே தற்போது காண முடியாது. வடிவேலு எப்படி கஷ்டப்பட்டு புகழின் உச்சியை அடைந்தாரோ அதுபோல தற்போது யோகி பாபுவும் புகழின் உச்சியை அடைந்துள்ளார். இவர் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அதன்பின் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த யோகி பாபு கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான யாமிருக்க பயமே என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்.
இந்த படத்தில் பன்னி மூஞ்சி வாயன் என்ற கதாபாத்திரம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின் காக்கிச்சட்டை, வேதாளம், அரண்மனை, மான் கராத்தே, கலகலப்பு, ரெமோ, தர்பார் உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்களை ரசிக்க வைத்தார். அதன்பின் நெல்சன் திலீப் குமார் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே நயன்தாராவுடன் நடித்து சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதையும் பெற்றார்.
அதைத்தொடர்ந்து இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்திருந்தார். இப்படம் பல்வேறு விருதுகளை அள்ளியது. இந்த படத்தின் மூலம் நகைச்சுவையை தாண்டியும் நடிப்பிலும் தன்னால் சிறந்த பங்களிக்க முடியும் என்பதை நிரூபித்திருந்தார்.
மேலும் சிறந்த நடிகருக்காக இவர் பெற்ற விருதுகள் எல்லாம் இவர் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்பதற்கான அடையாளமாக விளங்குகிறது.
திரை உலகில் இவருக்கு முன்னதாக பல நகைச்சுவை நடிகர்கள் வந்திருந்தாலும் யோகி பாபு மட்டுமே தற்போது எட்டா உயரத்தில் இருக்கிறார்.
தற்போது உருவாகி வரும் பல படங்களில் யோகி பாபு இல்லாத படங்களையே காண முடிவதில்லை.
அந்த வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் இவரின் நடிப்பும், வசனமும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் ரஜினியின் ஜெயிலர் படத்திலும் ஷாருக்கானின் ஜவான் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் யோகி பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நாமும் நம் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்வோம்.