spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்கஞ்சா கடத்தல் வழக்கில் சிறப்பு படை காவலர் கைது

கஞ்சா கடத்தல் வழக்கில் சிறப்பு படை காவலர் கைது

-

- Advertisement -

கும்மிடிப்பூண்டியில் கஞ்சா கடத்தல் வழக்கில் தமிழ்நாடு சிறப்பு படை காவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

தமிழ்நாடு – ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் கஞ்சா, செம்மரம், ரேஷன் பொருட்களின் கடத்தல் சம்பவங்களை தடுத்திடும் வகையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுவது வாடிக்கை. கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 32கிலோ கஞ்சா மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசால் பறிமுதல் செய்யப்பட்டது. அன்றைய தினமே வழக்கு தொடர்பாக லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனரான திருச்சியை சேர்ந்த முகமது அசாருதீன், கோவையை சேர்ந்த விவேக் ஆகிய இருவரை கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆந்திர மாநிலம் இச்சாபுரம் பகுதியில் பெண் கஞ்சா வியாபாரியிடம் வாங்கி கொண்டு மதுரைக்கும், திருச்சிக்கும் கொண்டு செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த வழக்கில் புலனாய்வு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த மே மாதம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கஞ்சா சப்ளையர் லட்சுமிபிரியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி தேனியை சேர்ந்த ஆத்தீஸ்வரன் என்கிற சிவாவை (24) கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் மதுரையை சேர்ந்த பிரகாஷ் என்ற காவலர் கஞ்சா வாங்கி வருவதற்காக சுமார் 2லட்ச ரூபாய் பணம் கொடுத்ததாக சிவா வாக்குமூலம் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் பேரில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்கா மண்ணடி மங்களத்தை சேர்ந்த பிரகாஷ் (27) என்ற சிறப்பு படை காவலரை கைது செய்தனர்.

பழனியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 14வது பட்டாலியனில் காவலராக பணியாற்றி வரும் பிரகாஷை கைது செய்தது குறித்து சிறப்பு பட்டாலியன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த போலீசார் கும்மிடிப்பூண்டி அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காவலர் பிரகாஷ் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். கஞ்சா வாங்குவதற்காக சுமார் 2.3 லட்சம் வங்கியில் கடன் வாங்கியதாகவும், கடன் வாங்கிய பணத்தை சிவாவிடம் கொடுத்து ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கி வருமாறு கொடுத்ததாக காவலர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். கஞ்சாவை மதுரையில் விற்பனை செய்ய திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிறப்பு காவல் படை காவலர் பிரகாஷை கைது செய்து கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

காவலர் பிரகாஷ் அவராகவே கஞ்சாவை விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தாரா அல்லது வேறு யாரிடமாவது கொடுத்து அதனை விற்பனை செய்ய திட்டமிட்டாரா என்பது போன்று தகவல்கள் அனைத்தும் மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்திய பிறகே தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர். கஞ்சா கடத்தல் வழக்கில் சிறப்பு காவல் படை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ