விழுப்புரம் அருகே கல்லூரி மாணவர் அடித்துக் கொலை, காதல் விவகாரத்தில் நண்பர்களே தீர்த்து கட்டிய பயங்கரம், 2 இளைஞர்களை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே உள்ள கப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞரான ராஜன் என்பவர் விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் பி.காம் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் இருந்த கல்லூரி மாணவர் ராஜனை அவரது சக நண்பர்கள் வெளியே சென்று, மது அருந்தலாம் எனக்கூறி, அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், மது அருந்தி கொண்டிருக்கும் போது, மதுபோதையில் இருந்த கல்லூரி மாணவர் ராஜனின் தலையில் செங்கல்லைக் கொண்டு தாக்கி, உடனிருந்த நண்பர்களே அடித்துக் கொலை செய்து விட்டு, தப்பியோடிவிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் காணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அடித்துக் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் ராஜனின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் ராஜனை கொலை செய்த அவரது நண்பர்களான இரண்டு பேரை காணை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, தனது அண்ணன் மகளை ராஜன் காதலித்து வந்ததாகவும், காதலை கைவிடுமாறு பலமுறை வலியுறுத்தியும், தொடர்ந்து தனது அண்ணன் மகளை காதலித்து வந்ததால் ஆத்திரமடைந்து, ராஜனை நைசாக பேசி அழைத்துச் சென்று குடிக்க வைத்து, மதுபோதையில் இருந்தபோது, அருகிலிருந்த செங்கல்லை எடுத்து, தலையில் அடித்துக் கொலை செய்ததாகவும் ராஜனின் நண்பர் சத்தியராஜ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, காதல் விவகாரத்தில் சக நண்பனை கல்லைப்போட்டு கொலை செய்த ஒரு கோடி கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜ், விழுப்புரம் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த ரவுடி லாலி கார்த்திக் உள்ளிட்ட 2 பேரை கைது செய்து, காணை போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவரை சக நண்பர்களே தீர்த்துக் கட்டிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில், கைதான லாலி கார்த்திக் ஏற்கனவே 3 கொலை வழக்கில் தொடர்புடைய நபர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை வழக்கில் கொலை நடந்த 6 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை காணை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது
