சென்னை வண்ணாரப்பேட்டையில் சரித்திர பதிவேடு ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுவன் உட்பட 6 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


வழிமறித்து சரமாரி தாக்குதல்!
சென்னை ஓட்டேரி, SVM நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஜய் (20). ‘பலி ஆடு’ என்று அழைக்கப்படும் இவர் மீது காவல் நிலையத்தில் ‘சி’ கேட்டகிரி சரித்திர பதிவேடு (History Sheeter) குற்றவாளி வழக்கு நிலுவையில் உள்ளது. இவர் நேற்று முன்தினம் இரவு வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகர் குடியிருப்புப் பகுதி அருகே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் அஜயை திடீரென வழிமறித்து, அரிவாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பி ஓடினர். இதில் பலத்த காயமடைந்த அஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவமனைக்கு உடல் மாற்றம் – வழக்குப்பதிவு
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை காவல் துறையினர், இரத்த வெள்ளத்தில் கிடந்த அஜயின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சிறுவன் உட்பட 6 பேர் சிறையில் அடைப்பு
காவல்துறையினரின் தீவிர விசாரணையில், இக்கொலை வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகளான அருண் என்ற அருண் ராஜ் (27 – சரித்திர பதிவேடு ரவுடி), தனுஷ் என்ற ஸ்பேரோ தனுஷ் (22), தமிழரசன் (29), சிவா (23), சுனில் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரையும் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய பின், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
