கிருஷ்ணகிரி அருகே மதுபானம் வாங்க ரூ.70 கடன் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த இரு வாலிபர்கள், டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் விற்பனை உதவியாளருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. தப்பியோட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து, கயிற்றால் கட்டிப்போட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


ரூ.70 பாக்கி விவகாரத்தில் தகராறு:
கிருஷ்ணகிரி அடுத்த பாஞ்சாலியூர் கிராமத்தில் எண் 2150 கொண்ட அரசு டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. இக்கடையில் தர்மபுரி மாவட்டம் கோம்பை பகுதியைச் சேர்ந்த சின்னசாமி (50) விற்பனையாளராகவும், கிருஷ்ணகிரி ராஜாஜி நகரைச் சேர்ந்த பிரகாஷ் (58) விற்பனை உதவியாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை கிருஷ்ணகிரி அடுத்த மேல்சோமார்பேட்டையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (27), லைன்கொல்லையைச் சேர்ந்த திருமால் என்ற நித்தீஷ்குமார் (25) ஆகிய இரு வாலிபர்கள் கடைக்கு வந்துள்ளனர்.
அவர்கள் 2 பீர் பாட்டில்களை வாங்கிவிட்டு, ரூ.30 குறைவாகக் கொடுத்துள்ளனர். பாக்கி பணத்தை அடுத்த முறை வரும்போது தருவதாகக் கூறிச் சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்த அவ்விருவரும், மேலும் ஒரு பீர் பாட்டில் கேட்டு ரூ.40 குறைவாகக் கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த விற்பனையாளர், “ஏற்கனவே ரூ.30 பாக்கி வைத்துள்ளீர்கள். மீண்டும் ரூ.40 குறைவாகக் கொடுத்தால் எப்படி தருவது?” எனக் கேட்டுள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும், பிரச்சனை வேண்டாம் எனக் கருதி விற்பனையாளர் அவர்களுக்கு பீர் பாட்டிலை வழங்கி அனுப்பியுள்ளார்.
பீர் பாட்டிலில் பெட்ரோல் குண்டு வீச்சு:
இதனால் ஆத்திரமடைந்த மதுபோதையில் இருந்த வாலிபர்கள் இருவரும், கடையின் அருகில் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தி, அதில் இருந்த பெட்ரோலை காலியான பீர் பாட்டிலில் நிரப்பியுள்ளனர். பின்னர் அதில் துணியை திணித்துத் தீப்பற்ற வைத்து, திடீரென டாஸ்மாக் கடைக்குள் வீசியுள்ளனர். கடைக்குள் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்துச் சிதறியதில், அங்கு பணியில் இருந்த விற்பனை உதவியாளர் பிரகாஷின் இடது நெற்றி, இடது கன்னம் மற்றும் இடது தோள்பட்டை ஆகிய இடங்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
பொதுமக்கள் தர்மஅடி – கயிற்றால் கட்டிப்போட்டு ஒப்படைப்பு:
இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கு நின்றிருந்த மதுப்பிரியர்களும் அக்கம் பக்கத்தினரும் உடனடியாகச் செயல்பட்டு, தப்பியோடு முயன்ற சத்தியமூர்த்தி என்ற வாலிபரை மடக்கிப் பிடித்தனர். அவரை டாஸ்மாக் கடையின் வெளிப்புற தடுப்புகளில் கயிற்றால் கட்டி வைத்தனர். காவல்துறையினர் வரும் வரை, போதையில் இருந்த அந்த வாலிபர் அங்கிருந்தவர்களை தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், இரு வாலிபர்களையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அத்துடன் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை:
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அந்த டாஸ்மாக் கடை உடனடியாக மூடப்பட்டது. தீக்காயமடைந்த விற்பனை உதவியாளர் பிரகாஷ், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
