Homeசெய்திகள்க்ரைம்அன்புஜோதி ஆசிரம விவகாரம் - சிபிசிஐடி போலீசாருக்கு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

அன்புஜோதி ஆசிரம விவகாரம் – சிபிசிஐடி போலீசாருக்கு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

-

- Advertisement -

விழுப்புரம் அருகே உள்ள அன்புஜோதி ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரையும் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு.

விழுப்புரம் மாவட்டம், குண்டலப்புலியூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த அன்புஜோதி ஆசிரமத்தில், கடந்த 10ஆம் தேதி போலீசாரும், அரசு அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்தியபோது, உரிய அனுமதியின்றி ஆசிரமம் நடைபெற்று வந்தது, ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆசிரமத்தில் இருந்த 20-க்கும் மேற்பட்டோர் காணாமல்போனது என, அடுக்கடுக்கான பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.

இதையடுத்து, ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் மற்றும் பணியாளர்கள் என 9 பேர் கெடார் போலீசாரால் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

we-r-hiring

அன்புஜோதி ஆசிரம விவகாரத்தில் தொடர்ந்து நாளுக்குநாள் பல்வேறு சர்ச்சைக்குள்ளான தகவல்கள் வெளியாகி, பூதாகரமாகி வருவதால் அன்புஜோதி ஆசிரம வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்து, தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

இதையடுத்து, வழக்கு விசாரணை ஆவணங்கள் அனைத்தும் கடந்த 20ஆம் தேதி சிபிசிஐடி போலிசார் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கடந்த 21ஆம் தேதி முதல் சிபிசிஐடி போலீசார் தங்களது விசாரணையை தொடங்கி, பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்புஜோதி ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆஸ்ரம மேலாளர் பிஜூ மோகன் மற்றும் ஆஸ்ரம பணியாளர்கள் உள்ளிட்ட 8 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக்கோரி, கடந்த 23ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, இன்று நிதிபதி புஷ்பராணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்புஜோதி ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் மற்றும் ஆஸ்ரம பணியாளர்கள் உள்ளிட்ட 8 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் இன்று நேரில் ஆஜர்படுத்தி இருந்தனர்.

இதையடுத்து, 8 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட சிபிசிஐடி போலீசாரின் மனு மீது, நீதிபதி புஷ்பராணி விசாரணை நடத்தினார்.

இதில், அன்புஜோதி ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரையும் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார். அதாவது வரும் 28 ஆம் தேதி 12 மணிக்குள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து, போலீஸ் வாகனத்தில் 8 பேரும் ஏற்றப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகு விழுப்புரம் அருகே காகுப்பத்தில் உள்ள போலீசாரின் ஆயுதப்படை வளாகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு வைத்து 8 பேரிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ