கோயில் கோயிலாக சாமி கும்மிட போகும் பெண்களுக்கு மத்தியில், கொள்ளையடிக்க சென்ற பெண் காவல் துறையினர் கைது செய்தனர். நெற்றியில் பட்டையும், பொட்டுமாக பக்தியுடன் வலம் வந்து கைவரிசை காட்டியது காவல் துறை விசாரணையில் அம்பலமானது.
வழக்கமாக நெற்றியில் பட்டை, சந்தன பொட்டு என திலகமிட்டு இருக்கும் பெண்கள் பக்தி பரவசத்துடன் இருப்பார்கள். கோயில் கோயிலாக சென்று பயபக்தியுடன் சாமி கும்மிடுவர். ஆனால் ஒரு பெண் இதற்கு விதிவிலக்காக, பக்தி பரவச போர்வையில் கோயில் கோயிலாக சென்று கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கின்றார்.
அந்த பெண் பேருந்து பயணியிடம் கைவரிசை காட்டியபோது சிக்கி சிறை சென்றிருக்கின்றார். கோவை துடியலூர் அருகே உள்ள டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த சந்திர பிரபா, தனது சகோதரியுடன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பூ மார்க்கெட் பஸ் நிறுத்ததில் இறங்க முயன்றார்.

அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி இளம் பெண் ஒருவர் அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றார். இதில் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்திருக்கின்றார். அந்த பெண் அலறலை கேட்ட அங்கிருந்து பொதுமக்கள் அக்கம் பக்கத்தினர் நகை பறிப்பினில் ஈடுபட்ட பெண்ணை மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவரை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் தங்க நகை பறித்த இளம் பெண், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்த சத்யா(32) என்பது தெரியவந்தது. போலிஸார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தன.
சத்யா மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழகத்தில் உள்ள எந்தெந்த கோவில்களில் எந்த நாளில், எந்த தேதியில் திருவிழா வருகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்துள்ளனர். அதனடிப்படையில், எப்போது எங்கு சென்று கூட்டத்தை பயன்படுத்தி செயின் பறிப்பில் ஈடுபடலாம் என முன் கூட்டியே திட்டம் வகுத்து வைத்துள்ளனர்.
அதனடிப்படையிலே சத்யா திருவண்ணாமலை, பழனி, திருப்பதி, கோவை உள்பட பல்வேறு கோவில்களில் நடந்த திருவிழாகக்களில் கைவரிசை காட்டியது போலிஸ் விசாரணையில் அம்பலமானது. திருவிழா நேரங்களில் அந்தந்த ஊர்களுக்கு சென்று நோட்டமிட்டு, பக்தி பரவசத்துடன் பட்டையும், சந்தன பொட்டுமாக பக்தரைப் போல் வலம் வந்து கைவரிசை காட்டியிருக்கின்றனர்.

குறிப்பாக நகை, பணத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது. இதில் கிடைக்கும் பணத்தை கொண்டு தங்களது சொந்த ஊரில் ஆடம்பர பங்களா கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தும் தெரியவந்தன. இன்னும் சில நாளில் கோவை கனியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ள நிலையில், அதனை அறிந்து நகை மற்றும் பொருட்களை திருட கோவை வந்த சத்யா, கூட்டத்தில் கைவரிசை காட்டிய நிலையில் பொதுமக்களால் பிடிபட்டு போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றா.
இது குறித்து ஆர். எஸ். புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்யாவை கைது செய்த நிலையில், சத்யாவுடன் தொடர்பில் உள்ள நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
