கல்லூரி மாணவரை கார் ஏற்றி கொலை செய்ததாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட, தி.மு.க. பிரமுகரின் பேரனின் ஜாமீன் மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்துள்ளது.
காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில், சென்னை அயனாவரம் முத்தம்மன் தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நிதின்சாய் என்பவரை கார் ஏற்றி கொலை செய்ததாக திருமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக நிர்வாகி தனசேகரனின் பேரன் சந்துரு சரண் அடைந்தார். கைது செய்யப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி, சந்துரு தாக்கல் செய்த மனுவை, கடந்த ஜூன் மாதம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், ஜாமீன் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சந்துரு, இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இறந்தவரின் நண்பர்கள், மனுதாரரும், அவரது நண்பர்களும் வந்த கார் மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டதால், தற்காப்புக்காக காரை வேகமாக இயக்கிய போது, துரதிர்ஷ்டவசமாக, நிதின்சாய் பயணித்த டூவீலர் மீது கார் மோதியது. மனுதாரர் காரை, அவர் ஓட்டவில்லை. கல்லூரி மாணவரான மனுதாரர், 26 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அப்போது, காவல்துறை தரப்பில், மனுதாரர், அவரது நண்பர்கள், இறந்தவர் சென்ற டூவீலரை, காரில் துரத்தி சென்று மோதியதால் நிதின்சாய் இறந்துள்ளதாக வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, காரை நண்பர் ஓட்டி சென்ற போதிலும், நிதின் சாய் மீது மோதத் தூண்டியது மனுதாரர் என்பதால் ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
வாக்குகளில் முறைகேடு… ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் – கிருஷ்ணசாமி கண்டனம்


