திருமணம் ஆகி ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இன்ஸ்டாகிராமில் பழகி இரண்டாவது திருமணம் செய்து மோசடி செய்த நபா் கைது செய்யப்பட்டாா்.எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் சந்தியா இவர் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான ஜிம் பயிற்சியாளராக வேலை பார்த்து வந்த சென்னை சோழிங்கநல்லூரில் தாலர் ஸ்டாப் தெருவை சேர்ந்த 33 வயதுடைய பிரேம்கி என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.
இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 15 தேதி அன்று எண்ணூர் தாழங்குப்பத்தில் உள்ள அம்மன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனையடுத்து இருவரும் சென்னை மேடவாக்கத்தில் தனியாக வீடு எடுத்து தங்கி 9 மாதமாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். அப்போது பிரேம்கி ஏற்கெனவே திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளது என சந்தியாவுக்கு தெரிய வந்ததும், சந்தியா பீரேம்கியிடம் சண்டையிட்டு எண்ணூரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் பிரேம்கி சந்தியாவுக்கு தினமும் செல்போன் மூலமும் நேரிலும் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனையடுத்து சந்தியாவும் பிரேம்கியும் ஒன்றாக சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவதாக சந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து சந்தியா எண்ணூர் பர்மா நகரில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற போது பிரேம் காரில் சந்தியாவை திருவான்மியூர் உள்ள தனியார் ஹோட்டலுக்கு அழைத்து சென்று, அடைத்து வைத்து சித்ரவதை செய்து உள்ளார்.
மறுநாள் காலை தனியாக வீடு பார்க்கலாம் என்று கூறி சந்தியாவை காரில் அழைத்துச் சென்றபோது அடித்துத் தாக்கி கத்திரி கோலை வைத்து சந்தியாவின் தலை முடியை வெட்டி உள்ளார். மீண்டும் சந்தியாவை திருவான்மியூர் ஹோட்டலில் அழைத்து வந்து மீண்டும் தாக்கியுள்ளார். இதனையடுத்து இரவு இரண்டு மணிக்கு சந்தியாவின் தாய்க்கு பிரேம்கி தொடர்பு கொண்டு மகளை ஹோட்டலில் அடைத்து வைத்து இருப்பதாகவும் கழுத்து அறுத்து போடுவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து சந்தியாவின் தாய் செல்வி எண்ணூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரேம்கியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.